ஜூலை 30, 2010 வரையறுக்கப்பட்ட எம் ரீ வீ ச்சனல் தனியார் நிறுவனம் 7 வருடங்களாக யாழ் குடா நாட்டில் சக்தி ரீ வீ ஒளிபரப்புக்காகப் பயன்படுத்திய அலைவரிசையை வேறு நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பான வழக்கு நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
யாழ் குடா நாட்டில் சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு யூ எச் எஃப் 46 என்ற அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி சுமதி தர்மவர்தன தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய கட்டணத்தைச் செலுத்தி அலைவரிசையைப் பயன்படுத்த முடியுமென அரச தரப்புச் சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டார்.
யாழ் குடா நாட்டில் சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அலைவரிசையை வழங்கத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இணங்கியுள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சத்தியா ஹெட்டிகே மற்றும் அனில் குணரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுதத் பெரேரா சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகளான சதமாலி சந்திரசேகர மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் மனுதாரர் தரப்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.













