ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

ஜெனரல் பொன்சேகாவிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

E-mail Print PDF

ஜூலை 29, 2010  வெள்ளைக் கொடியுடன் வந்த எல் ரி ரி ஈ உறுப்பினர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துத் தொடர்பான வழக்கில், அவரிடம் இன்று குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.

குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்குடன் தொடர்புடைய மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்கு  நீதிபதிகள் குழாம், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கால அவகாசம் வழங்கியது.

அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சாட்சியாளர்களும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜாராகும்வகையில் அழைப்பாணைகளை அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பொது மக்களின் வாக்குகளினால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினரும் கட்சித் தலைவருமான ஜெனரல் பொன்சேகாவுக்குப் பாராளுமன்றத்திற்குச் சமூகமளிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி நீதிமன்றத்தைக் கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு ஜெனரல் பொன்சேகாவைப் பாதுகாப்பில் வைத்துள்ள இராணுவ மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சியாக மூன்று இறுவெட்டுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதிச் சட்ட மா அதிபர் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவுடன் இடம்பெற்ற நேர்காணல் விபரங்கள் அடங்கிய  ஊடகவியலாளர் பிரெட்றிகா ஜான்ஸின் குறிப்புப் புத்தகம்  தற்போது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், அதனை மேல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் சட்டத்தரணி லத்துவஹெட்டி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Last Updated ( Friday, 30 July 2010 06:59 )