ஜூலை 29, 2010 பல்கேரிய - கிரேக்க எல்லையில் சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுடன் கைப்பற்றப்பட்ட டிரக் வாகனத்தில் இரண்டு இலங்கையர்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
போலந்திலுள்ள பல்கேரியத் தூதரகத்தின் ஊடாக இது குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போலந்துக்கான இலங்கை தூதரகத்தின் பிரதம செயலாளர் மாலனி கந்தப்பொல கூறினார்.
இவர்கள் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கைக் குடியேற்றவாசிகள் குறித்து மேற்கொள்ளப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவுள்ளதாகப் பிரதம செயலாளர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தூதரகம் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் டிரக் வாகனத்திற்குள் மறைந்து பல்கேரிய எல்லையூடாக ஹங்கேரிக்குள் நுழையத் திட்டமிட்டிருந்ததாகப் பல்கேரியப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
டிரக் வாகனத்திலிருந்து கைதான ஏனைய குடியேற்றவாசிகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனப் பல்கேரியப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.













