ஜூலை 28, 2010 போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தப் பொலிசார் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொல்பித்திகம மா எலிய பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டனர்.
தமது பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தற்போது அதிகரித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
போதைப் பொருள் விற்கும் ஒருவரைப் பொலிசார் கைது செய்தும் அவரைத் தப்பிச் செல்ல விட்டுள்ளதாக அவர்கள் பொலிசாரின்மீது குற்றம்சாட்டினர்.
இவ்வாறு தப்பிச்சென்ற போதைப்பொருள் விற்பனையாளரைப் பிடித்துத் தாம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பாடசாலைப் பிள்ளைகளுக்கும் போதைப் பொருள் விற்பதற்கு இந்த நபர் முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
பொல்பித்திகம பிரதேச மக்களின் குற்றச்சாட்டுத்தொடர்பாக குருநாகல் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திடம் வினவியபோது அந்தப் பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் பொலிசார் விசேட கவனம் செலுத்திவருவதாக அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.













