ஜூலை 28, 2010 புத்தள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றைச் செய்வதற்குச் சென்ற இராணுவ வீராங்கனை ஒருவரை மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்தே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மொனராகலைப் பிரதேசப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த இராணுவ வீராங்கனை கடந்த ஏப்ரல் மாதம் முதல் சேவைக்கு சமுகமளிக்கவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னர் அவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் எனக் குறிப்பிட்டு நீதிமன்றத்தின் ஊடாக தியத்தலாவ இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் நோயுற்ற நிலையில் காணப்பட்டதன் காரணமாக தியத்தலாவை வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் விஷேட சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்காக பதுளை விசேட சட்ட வைத்திய அதிகாரி எம்.என்.ரஹால் ஹக் சம்பவம் இடம்பெற்ற இடத்தினைப் பரிசோதனை செய்வதற்காக நேற்று புத்தளவிற்குச் சென்றார்.
சட்ட வைத்திய விசாரணை அறிக்கையை இன்று காலை பதுளை பொலிஸ் அத்தியட்சகரிடமும் வைத்தியசாலைப் பொலிஸாரிடமும் கையளித்ததாக அவர் கூறினார்.
இதேவேளை பதுளை வைத்தியசாலையில் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இராணுவ வீராங்கனை மீண்டும் தியத்தலாவை இராணுவவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ வீராங்கனை சேவைக்குச் சமூகமளிக்காமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல குறிப்பிட்டார்.













