ஜூன் 22, 2010 யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி நகரப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திலும் அதன் நகரப்பகுதியிலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதையடுத்து, பல்வேறு அரச அலுவலகங்களும் சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களும் அங்கு செயற்பட முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்குவகித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அலுவலகங்களும் அங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான நிவாரண உணவுப் பொருட்களைப் பங்கீட்டு அடிப்படையில் இலவசமாக வழங்கி வரும் உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய நிறுவனம், குழந்தைகளின் நலன்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய அலுவலகமே திறந்து வைக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எல் ரி ரி ஈயினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து, அங்கு செயற்பட்டு வந்த ஐக்கிய நாடுகளின் அலுவலகங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













