ஜூன் 22, 2010 'ஓஷன் லேடி' கப்பல் மூலம் கனடாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட குடியேற்றவாசிகளில் 25 பேர் எல் ரி ரி ஈ உறுப்பினர்களெனச் சந்தேகிக்கப்படுவதாகக் கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் சித்ராங்கனி வாகீஷ்வர தெரிவிக்கிறார்.
76 குடியேற்றவாசிகளுடன் பயணித்த இந்தக் கப்பலைக் கனேடிய கரையோரப் பாதுகாப்புப் படையினர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கைப்பற்றினர்.
இந்த எல் ரி ரி ஈ சந்தேக நபர்கள் குறித்துக் கனேடியப் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்திவருவதாக அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டார்.
கனடாவின் வன்கூவர் பிரதேசத்திற்குக் கப்பல் மூலம் நுழைந்த 76 இலங்கையர்கள் எல் ரி ரி ஈ இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கப்பல் மூலம் வந்தவர்கள் குறித்துக் கனடிய அரசாங்கமும் சந்தேகம் கொண்டிருந்ததாகக் கனடா நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர்கள் அனைவரும் பின்னர் நான்கு மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்













